தமிழவேளும் தமிழர் திருநாளும்
பல்வேறு பிரிவினராகச் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் கூட்டத்தினரை ஒன்றுபடுத்திய திருநாள்! செந்தமிழ் இல்லம் தோறும் தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு மணக்கப் பிறந்திட்ட முத்தமிழ்த் திருநாள்! எம் மதத்தைச் சேர்ந்த தமிழராயினும் மொழியுணர்வில் ஒன்றுகூடி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வெற்றி முரசு கொட்டும் மாண்புத் திருநாள்! தீந்தமிழைப் பருகுகின்ற தீஞ்சுவைத் திருநாள்!மறத்தமிழன் மாண்புணர்த்தும் மாசற்ற திருநாள்! அரசியல் கலவாத திருநாள்! அறவழிப் பிறழாத திருநாள்! திறமனைத்தும் காட்ட வாய்ப்பு நல்கும் திருநாள்! பைந்தமிழர் வாழ்வினிலே ஒரு தங்கத் திருநாள்! அது தமிழ்த் தாயின் திருமகன் தமிழவேள் கோ. சா. உருகொடுத்த தமிழர் திருநாள்!
பல்வேறு பிரிவினராகச் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் கூட்டத்தினரை ஒன்றுபடுத்திய திருநாள்! செந்தமிழ் இல்லம் தோறும் தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு மணக்கப் பிறந்திட்ட முத்தமிழ்த் திருநாள்! எம் மதத்தைச் சேர்ந்த தமிழராயினும் மொழியுணர்வில் ஒன்றுகூடி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வெற்றி முரசு கொட்டும் மாண்புத் திருநாள்! தீந்தமிழைப் பருகுகின்ற தீஞ்சுவைத் திருநாள்!மறத்தமிழன் மாண்புணர்த்தும் மாசற்ற திருநாள்! அரசியல் கலவாத திருநாள்! அறவழிப் பிறழாத திருநாள்! திறமனைத்தும் காட்ட வாய்ப்பு நல்கும் திருநாள்! பைந்தமிழர் வாழ்வினிலே ஒரு தங்கத் திருநாள்! அது தமிழ்த் தாயின் திருமகன் தமிழவேள் கோ. சா. உருகொடுத்த தமிழர் திருநாள்!
திரைக்கடலோடியும் செல்வம் தேடு என்னும் நோக்கத்தில் தமிழகத்தை விட்டு மலேசியா, சிங்கை போன்ற நாடுகளில் குடியேறிய தமிழர் இந்நாடுகளில் உள்ள காடுகளை அழித்து, நிலந்திருத்திச் சாலைகள் அமைத்தனர். பால் மரக்காடுகளில் பால்மரம் சீவி நாட்டின் பொருள்நிலையை உயர்த்தினர். ஆனால் செல்வம் தேட வந்த நாட்டிலே அக்கு வேறு ஆணி வேறாகச் சிதறினர். இப்படிச் சிதறுண்ட செந்தமிழ்க் கூட்டத்தினரை மொழி அடிப்படையில் ஒன்று சேர்க்கும் அரியதொரு முயற்சியில் ஈடுபட்டு அதில் சிறப்பான வெற்றியையும் கண்டார் தமிழவேள் கோ. சா... தமிழர்கள் அனைவரும் ஒரே மதத்தினர் அல்லர்; சிவநெறி, மால் நெறி, கிறித்துவம், இசுலாம், பகாய், புத்தம் போன்ற பலவகை மதத்தைச் சார்ந்தவர்களாயிருக்கின்றனர்.
சிவநெறியையும், மால் நெறியையும் சார்ந்த தமிழர்கள் தங்களை இந்து என்று தவறாக எண்ணிக் கொண்டு அறிவுக் கொவ்வாத பலவகையான விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இவர்கள் கொண்டாடுகின்ற ஆரிய விளக்கணி (தீபாவளி), தொள்ளிரவு (நவராத்திரி), பிள்ளையார் நோன்பு (விநாயகர் சதுர்த்தி), கண்ணன் பிறந்த நாள் (கோகுலாஷ்டமி) போன்ற விழாக்கள் தமிழர்க்குரியன அல்ல. எனினும், இவ்விழாக்கள் அனைத்தையும் தமிழர்கள் தங்களுக்கே உரிய விழாக்களாக எண்ணிக் கொண்டு சீரும் சிறப்புடனும் கொண்டாடி வருகின்றனர்.
இவ்விழாக்கள் மதச் சார்போடு பகுத்தறிவுக்கொவ்வாத கதைகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தன்மானத் தமிழர்கள் இவற்றைக் கொண்டாட மறுக்கின்றனர்.
இவ்விழாக்களை மதத்திற்கு அப்பாற்பட்ட திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கிறித்துவம், இசுலாம் போன்ற பிற மதங்களைச் சார்ந்த தமிழர்களும் கொண்டாட மறுக்கின்றனர்.
இவ்விழாக்களைத் திராவிடக் கழகத்தவர்கள் கொண்டாட பகுத்தறிவுத் தடையாகவும், பிற மதத்தவர்கள் கொண்டாட மதம் தடையாகவும் இருக்கின்றன.
இசுலாமியத் தமிழர்கள் தங்கள் மத அடிப்படையில் அரி ராயா புவாசா, அரி ராயா அஜி போன்ற விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இவற்றைச் சிவநெறித் தமிழர்களோ, மால் நெறித் தமிழர்களோ, கிறித்துவத் தமிழர்களோ, பகாய் தமிழர்களோ கொண்டாட முடியாது.
கிறித்துவத் தமிழர்கள் தங்கள் மத அடிப்படையில் கிறஸ்துமஸ், பெரிய வெள்ளிக் கிழமை போன்ற விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இவற்றையும் பிற மதத் தமிழர்களோ பகுத்தறிவு இயக்கத்தினரோ கொண்டாட முடியாது.சிவநெறி, மால்நெறி, கிறித்துவம், இசுலாம், பகாய் போன்ற மதங்களைச் சார்ந்த தமிழர்கள் கொண்டாடும் எந்தவொரு விழாவையும் எல்லாத் தமிழர்களும் கொண்டாட முடியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழாவைத் தமிழர்கள் அனைவரும் பொது விழா வாகக் கொண்டாடலாம். இடைக்காலத்திலே மதக் கருத்துக்கள் புகுத்தப்பட்டாலும் பொங்கல் மதச் சார்பற்ற விழா; பகுத்தறிவுக்கு உட்பட்ட விழாவும் ஆகும். இது தமிழர்களின் நன்றி மறவாமையையும், பண்பாட்டையும், உழைப்பின் பெருமையையும் விளக்கும் உயரிய‡தூய திருநாளாக ஒளிர்கிறது.
இருப்பினும், பண்பாட்டையும் கடந்து சிதறுண்டு கிடக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேரவும், நமது மொழி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும், வளர்க்கவும், நம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும் மொழியையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மொழி இன விழா நமக்குத் தேவைப்பட்டது.
தமிழ் மக்கள் பிளவுபட்டு நின்றமைக்கு மிக முதன்மையான கரணியமாகத் தமிழ் மன்பதையில் நிலவி வந்த வகுப்பு (சாதி)ப் பிரிவுகளையே கூற வேண்டும். இந்து மதக் கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்த தமிழர்கள், அம்மதத்தின் உயிர் நாடியான வகுப்பு(சாதி)ப் பிரிவுகளை விடாப்பிடியாகப் பின்பற்றி ஒழுகி வந்தனர். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற கற்பனை வேற்றுமைகள் தமிழ் மன்பதையை மிகவும் பிளவுபடுத்தியிருந்தது. சாதியால் வேறுபட்டு நின்ற தமிழர்கள் அப்பொய்யான உயர்வு தாழ்வுகளை-துறந்து தமிழன் என்ற ஒரே உணர்வில் ஒன்று சேரவேண்டியது இன்றியமையாததன்றோ!
தோட்டத்தில் வேலை செய்யும் தமிழர், அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழர், நகரத்தில் வேலை செய்யும் தமிழர், வாணிபம் செய்யும் தமிழர் என்று தொழில் அடிப்படையில் வேறு தமிழ் மன்பதை வேறுபட்டு நின்றது.
எங்கு, என்ன வேலை செய்தாலும் தமிழுணர்வோடும் தமிழன் என்ற பொதுமை உணர்வோடும் வாழ வேண்டிய தமிழர்கள், இப்படி அறிவுக்கொவ்வாத வேறுபாடுகளை மனத்திற்குள் உருவகம் செய்துகொண்டு பிளவுபட்டு நிற்கலாமோ! எல்லோரும் ஒன்று சேர்ந்து மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றைப் பேண வேண்டாமா? வளர்க்க வேண்டாமா?
சமயம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் தமிழர் பிளவுபடவில்லை. மலையகத்தில் பிறந்த தமிழர், இலங்கையில் பிறந்த தமிழர், இந்தியாவில் பிறந்த தமிழர் என்று பிறந்த நாட்டின் அடிப்படையில் வேறு தமிழர்கள் சிதறினர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர் கருத்தினை உலகிற்கு அளித்த தமிழன் இப்படி பிறந்த நாட்டின் அடிப்படையில் வேறுபட்டது வருந்துதற்குரியதன்றோ?
எந்த நாட்டில் பிறந்தாலும், என்ன தொழில் செய்தாலும் தமிழன் தமிழன்தானே? அவன் தாய்மொழி தமிழ்தானே? அப்படியிருக்க, நாட்டினத்தைக் காரணங் காட்டித் தமிழர் பிளவுபட்டு நிற்கலாமா?
மதம், வகுப்பு (சாதி), தொழில், பிறந்த நாடு, வாழ்க்கைத்தரம் போன்றவை வேறு என்றாலும் மொழி, இன அடிப்படையில் அனைவரும் தமிழர்தாமே! தமிழர் என்ற முறையில் நமது கலை, மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைப் பேணி வளர்க்க வேண்டியது நமது கடமை அன்றோ?
எந்த மதத்தைச் சார்ந்து இருந்தாலும், எந்த நாட்டில் பிறந்தாலும், எந்தச் சாதியை உருவகம் செய்துகொண்டு இருந்தாலும், எந்த நாட்டில், எந்தத் தொழில் செய்து வாழ்ந்தாலும் தமிழர் தமிழரல்லாமல் வேறினமாக மாற முடியுமா? தாய் மொழியை மாற்ற முடியுமா?
எனவே, வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு, நமது மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு இவற்றைப் பேண வேண்டியது தமிழர்களாகிய நம்முடைய கடமையன்றோ?
நாம் ஒன்றுபடவும், நம்முடைய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும், நம்முடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைப் பேணி வளர்க்கவும், தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு பொதுத் திருநாள் தேவையன்றோ? அத்திருநாளைப் பகுத்தறிவும் ஏற்கின்றதாக இருக்க வேண்டுமன்றோ?
வாழ வந்த நாட்டில் சமயம், சாதி, அரசியல், தொழில், பிறந்த நாடு போன்ற வேறுபாடுகளால் பிளவுபட்டு முன்னேற முடியாமல் இருந்த தமிழர்களை ஒன்று சேர்த்துத் தங்கள் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைப் பேணவும் வளர்க்கவும் செய்யவும் பொருளியல், கல்வி ஆகிய துறைகளில் முன்னேறச் செய்யவும் தமிழவேள் கோ. சா., தமிழர் திருநாள் என்ற பெயரில் ஒரு விழாவினைத் தோற்றுவித்தார்.
1952 ஆம் ஆண்டு சிங்கையிலும், பெர்லிசு பகுதியிலும் வேர்விட்டுத் துளிர்த்து, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நிலைக்கு உயர்ந்தது.
தமிழர் திருநாள் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? இக் கேள்விகளுக்குச் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபை வெளியிட்ட விளக்க அறிக்கை ஒன்று விடை செப்புகிறது. அவ்வறிக்கை :
தமிழர்களின் புதுநாள் தமிழர் திருநாள். தமிழர்கள் தம் மொழியையும் கலையையும் பேணி, ஒற்றுமை வளர்த்து தம் நிலையை உயர்த்திக்கொள்ளும் தகைமை சான்ற நாள் அந்நாள்.
தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட, தமிழ் பண்பாடுடைய அனைவரும் தமிழர். தமிழகம், ஈழம் என்ற மூல நாடுகளின் வேற்றுமைக்கு இடமில்லை. உலகின் எந்த நாட்டிலிருந்து வந்தவராயினும் மாலாயாவில் வாழும் தமிழ்த் தாய் மொழியினர் அத்தனை பேரும் தமிழர்கள். இந்து, இசுலாம், கிறித்துவர் இன்னும் வேறெந்தச் சமயவழி தம்மைக் காட்டிக்கொள்ளும் அத்தனை பேரும் இதில் இடம் பெறுகின்றனர்.
பொருளியல் சமூக இயலால் கொடிவழி போன்று பல்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவ்வளவு பேருக்கும் தமிழ்வேர் ஒன்று பல்வேறு மணிமாலைக்குள் ஓடும் நூல் போல இருப்பது தமிழாதலால் அதன்வழி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் அனைவரும் தமிழரே.
No comments:
Post a Comment